கார்த்தி பட பொய் பட்ஜெட் செல்வராகவனின் சர்ச்சை கருத்து


கார்த்தி பட பொய் பட்ஜெட் செல்வராகவனின் சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 20 Aug 2021 3:24 PM GMT (Updated: 2021-08-20T20:54:38+05:30)

கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் பற்றி செல்வராகவன் தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தை முடிக்க 2 வருடங்களுக்கு மேல் ஆனதால் செல்வராகவனுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. படத்தை எடுக்கும்போது சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு வைத்து விட்டதாகவும் தயாரிப்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கும் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் செல்வராகவன் தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடிதான். ஆனால் அதை ஒரு மெகா பட்ஜெட் படம்போல் காட்டுவதற்காக நாங்கள் ரூ.32 கோடி செலவில் தயாரான படம் என்று அறிவிக்க முடிவு செய்தோம். அது என்ன ஒரு முட்டாள்தனம். உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூலித்த நிலையிலும் அது சராசரி படமாகவே கருதப்பட்டது. என்ன பிரச்சினை வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக்கொண்டேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story