சினிமா செய்திகள்

பணியாளர்களுக்கு இருக்கை வசதி - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வசந்தபாலன் + "||" + Seating facility for staff in shops Director Vasanthabalan thanked TN Govt

பணியாளர்களுக்கு இருக்கை வசதி - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வசந்தபாலன்

பணியாளர்களுக்கு இருக்கை வசதி - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வசந்தபாலன்
கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அளிக்கும் சட்டமுன்வடிவுக்காக தமிழக அரசுக்கு இயக்குனர் வசந்தபாலன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நேற்று சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதி வழங்குவது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறி வருகிறது என்றும் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வெரிகோஸ் நோய் பற்றி அந்த படத்தில் தான் காட்சிப்படுத்தியதையும் வசந்தபாலன் நினைவு கூர்ந்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஜவுளி கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.