இந்தி நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரிஏய்ப்பு


இந்தி நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரிஏய்ப்பு
x
தினத்தந்தி 18 Sep 2021 10:58 PM GMT (Updated: 19 Sep 2021 10:46 AM GMT)

பிரபல இந்தி நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரிஏய்ப்பு செய்திருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

‘சந்திரமுகி‘யில் நடித்தவர்
பிரபல இந்திப்பட வில்லன் நடிகர் சோனுசூட். இவர் இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோனுசூட், ஒரு தொண்டு அறக்கட்டளையை தொடங்கினார். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அதன்மூலம் உதவிகள் செய்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் போய்ச்சேர ஏற்பாடு செய்தார். இதுபோன்ற நல்ல செயல்களால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

இந்தநிலையில், நடிகர் சோனுசூட் வரிஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக ரியல் எஸ்டேட் சொத்து ஆவணங்கள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், கடந்த 15-ந் தேதி சோனுசூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை தொடங்கியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குர்கான் ஆகிய நகரங்களில் 28 கட்டிடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நன்கொடை திரட்டினார்
இதில் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் குறித்து வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு நடிகர் (சோனுசூட்) கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அறக்கட்டளை தொடங்கினார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ.18 கோடியே 94 லட்சம் நன்கொடை திரட்டி உள்ளார். அவற்றில் நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் செலவழித்துள்ளார். மீதி ரூ.18 கோடி, பயன்படுத்தாமல் வங்கிக்கணக்கில் உள்ளது.மேலும், சமூக வலைத்தளம் மூலம் நிதி திரட்டும் வசதியை பயன்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடியே 10 லட்சம் நன்கொடை திரட்டி உள்ளார். அதில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன.

சொத்து குவிப்பு
அவர் போலியான நிறுவனங்கள் மூலம் போலியாக கடன் பெற்று, தனது கணக்கில் காட்டாத பணத்தை செலவழித்துள்ளார். இதுபோன்று 20 போலியான நிறுவனங்களிடம் கடன் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கடன் கொடுத்ததாக கணக்கு காட்டப்பட்டவர்கள், தாங்கள் பணம் பெற்றுக்கொண்டு அப்படி செய்ததாக ஒப்புக்கொண்டனர்.தொழில்முறை ரசீதுகள் கூட வரிஏய்ப்புக்காக கடனாக கணக்கு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இத்தகைய போலி கடன்களின் பெயரில், தனது கணக்கில் காட்டாத பணத்தை பயன்படுத்தி, முதலீடுகள் செய்துள்ளார். சொத்துகள் வாங்கியுள்ளார்.

ரொக்கப்பணம் சிக்கியது
லக்னோவில் உள்ள ஒரு உள்கட்டமைப்பு நிறுவனத்தில் அந்த நடிகர் பங்குதாரராக உள்ளார். அதில் நிறைய முதலீடுகள் செய்துள்ளார். அதனால் அந்த நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அது, போலி ரசீதுகள் மூலம் பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் சந்தேகத்துக்கிடமான வகையில் ரூ.175 கோடி பரிவர்த்தனை செய்திருப்பதும் தெரிய வந்தது. கணக்கில் காட்டப்படாத ரொக்க செலவினம், ரொக்க பரிவர்த்தனை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் சிக்கின.இந்த சோதனைகளில், ரூ.1 கோடியே 80 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 11 லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.20 கோடி வரிஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. முழுமையான வரிஏய்ப்பை கண்டறிய சோதனையும், விசாரணையும் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.


Next Story