நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்; டைரக்டர் வசந்தபாலன் சொந்த படம், ‘அநீதி’


நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்; டைரக்டர் வசந்தபாலன் சொந்த படம், ‘அநீதி’
x
தினத்தந்தி 24 Sep 2021 2:49 PM GMT (Updated: 2021-09-24T20:19:20+05:30)

டைரக்டர் வசந்தபாலன், தன் பள்ளி நண்பர்களுடன் கைகோர்த்து ‘அநீதி’ என்ற சொந்த படம் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்களில் ஒருவரான வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம், தேசிய விருது, மாநில விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர், ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத்தலைவன்’ என சிறந்த படைப்புகளை வழங்கினார். இப்போது அவர், ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த நிலையில் டைரக்டர் வசந்தபாலன், தன் பள்ளி நண்பர்களுடன் கைகோர்த்து சொந்த படம் தயாரிக்கிறார். தனது முதல் தயாரிப்புக்கு ‘அநீதி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். வசந்தபாலன் இயக்க, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ‘வெயில்’ படத்தின் மூலம் ஜீ.வி.பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர், டைரக்டர் வசந்த பாலன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூன்தாஸ், துஷாரா இருவரும் ஜோடியாக நடிக்க, அவர்களுடன் வனிதா விஜய குமார், சுரேஷ் சக்ரவர்த்தி, ஜே.எஸ்.கே.சதிஷ்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். படப் பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற இருக்கிறது.

‘‘சமுதாயத்தில் நிலவும் அநீதி மறைந்து, சமூக நீதி மேலெழும் உயர்ந்த கருத்தியலை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி வருகிறது’’ என்று டைரக்டர் வசந்தபாலன் கூறினார்.

Next Story