சினிமா செய்திகள்

ஆயுத பூஜையில் 3 படங்கள் ரிலீஸ் + "||" + Release of 3 films on Ayudha Puja

ஆயுத பூஜையில் 3 படங்கள் ரிலீஸ்

ஆயுத பூஜையில் 3 படங்கள் ரிலீஸ்
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
இதனால் வாரத்துக்கு நான்கு ஐந்து சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகி வருகின்றன. பண்டிகை காலங்களை குறிவைத்து பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியையும், பட நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகிறது. அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இரு தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் அறிவித்தார்.

விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும், பொங்கலுக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் பாக்கி உள்ளதால் அடுத்த வருடம் கோடையில் ரிலீஸ் செய்ய ஆலோசிக்கின்றனர்.இந்தநிலையில் அடுத்த மாதம் (அக்டோபர்) ஆயுத பூஜையில் விஷாலின் எனிமி, ஆர்யா நடித்துள்ள அரண்மனை 3-ம் பாகம், அதர்வாவின் தள்ளிப்போகாதே ஆகிய 3 படங்களையும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள எனிமி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில் ஆர்யா வில்லனாக நடித்து இருக்கிறார். அரண்மனை 3 பேய் படமாக தயாராகி உள்ளது. இதில் சுந்தர்.சி.யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி உள்ளார். ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால், மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கண்ணன் இயக்கி உள்ளார்.