போதை பொருள் வழக்கில் விடுதலையானதும் சமூக சேவையில் ஈடுபட ஷாருக்கான் மகன் விருப்பம்


போதை பொருள் வழக்கில் விடுதலையானதும் சமூக சேவையில் ஈடுபட ஷாருக்கான் மகன் விருப்பம்
x
தினத்தந்தி 20 Oct 2021 5:45 AM GMT (Updated: 2021-10-20T11:15:16+05:30)

போதை பொருள் வழக்கில் விடுதலையானதும் சமூக சேவையில் ஈடுபடுவேன் என ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உறுதி அளித்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

போதை பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகனும், இளம் நடிகருமான ஆர்யன் கான் டெல்லி ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் மற்ற கைதிகள் போலவே ஆர்யன் கான் நடத்தப்படுகிறார்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கொடூர குற்றங்களை செய்த பயங்கர குற்றவாளிகள் நடுவில்தான் அவர் ஒவ்வொரு நாளையும் தவிப்போடு கழிக்கிறார். ஆர்யன் கானுக்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் கவுன்சிலிங் அளித்தனர். அவர்களிடம் ‘சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நீங்கள் பெருமை படும்படியான நல்ல பணிகளை செய்வேன்’ என ஆர்யன் கான் உறுதி அளித்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன், தீய வழிகளில் இனி செல்ல மாட்டேன் என்றும் ஆர்யன் கான் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார். ஆர்யன் கானுக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடக்க உள்ளது.

Next Story