சினிமா செய்திகள்

சுதா சந்திரனிடம் மன்னிப்புக் கோரியது மத்திய தொழிற் பாதுகாப்புப் படை + "||" + The Central Industrial Security Force has apologized to Sudha Chandran

சுதா சந்திரனிடம் மன்னிப்புக் கோரியது மத்திய தொழிற் பாதுகாப்புப் படை

சுதா சந்திரனிடம் மன்னிப்புக் கோரியது மத்திய தொழிற் பாதுகாப்புப் படை
குறிப்பிட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். பயணப்படும் எந்தப் பயணிக்கும் சிரமம் ஏற்படாது இருக்க ஊழியர்களுக்கு எங்கள் விதிமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்துவோம்.
புதுடெல்லி

இந்திய பரதநாட்டியக் கலைஞர், இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்த பிரபல நடிகை, நடன நிகழ்ச்சிகளில் நடுவர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சுதா சந்திரன்.

'காஹின் கிஸ்ஸி ரோஸ்' போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் , 'நாகின்' தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்  சுதா சந்திரன். 

நடிகை சுதா சந்திரன் தனது  இன்ஸ்டாகிராமில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம்  உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.  தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் "அவமானப்படுத்தப்படுவதை" தவிர்க்கலாம் என்றும் நடிகை கூறி இருந்தார்.

அவர் தனது வீடியோவில் கூறி இருப்பதாவது:-

" மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள்""நான் சுதா சந்திரன், ஒரு நடிகர் மற்றும் நடனக் கலைஞர், நான் ஒரு செயற்கை மூட்டுடன் நடனமாடி வரலாற்றை உருவாக்கி, என் நாட்டை பெருமைப்படுத்தினேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது தொழில்முறை பயணம்  செல்லும்போது, நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை  மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள்  விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? 

"நம் நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நம் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு  ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

விமான நிலையத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த கிரில் வழியாக செல்லும் போது மிகவும் வலிக்கிறது. எனது செய்தி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்.  உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.  என அவர் கூறி இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மத்திய தொழிற் பாதுகாப்புப் படை டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறது.

அந்தப் பதிவில், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் பாகங்கள் நீக்கிப் பரிசோதிக்கப்படும். 

உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று குறிப்பிட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். பயணப்படும் எந்தப் பயணிக்கும் சிரமம் ஏற்படாது இருக்க ஊழியர்களுக்கு எங்கள் விதிமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்துவோம் என்று உறுதி கூறுகிறோம், என்று பதிவிட்டுள்ளது.