பிரபல நடிகர் ராஜபாபு உடல்நலக்குறைவால் காலமானார்


பிரபல நடிகர் ராஜபாபு உடல்நலக்குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:31 AM GMT (Updated: 25 Oct 2021 11:31 AM GMT)

பிரபல டோலிவுட் நடிகர் ராஜபாபு உடல் நலக்குறைவால் தன்னுடைய 64 வது வயதில் நேற்றிரவு காலமானார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரபுபேட்டாவைச் சேர்ந்தவர் ராஜபாபு. சிறுவயதில் இருந்தே நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மற்றும் ஜெயபிரதா நடித்த 'ஊரிக்கு மோனகாடு' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த 'சீதம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு', மகேஷ்பாபுவின் பிரம்மோத்சவம், வெங்கடேஷ், த்ரிஷா நடித்த ஆடவரி மாட்லாக்கு அர்த்தலே வேருலே, சமுத்திரம், மல்லி ராவா, ஸ்ரீகாரம் உட்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். 

இவர் 2005 ஆம் ஆண்டு 'அம்மா' தொடரில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார். திரையில் சீரியஸாகத் தோன்றும் ராஜபாபு நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான மனிதர்.

கடந்த சில நாட்களாக, உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ராஜபாபு, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். ராஜபாபுவின் திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு நடிகர், நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story