நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்; கமல்ஹாசன் டுவிட்


நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்; கமல்ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 30 Oct 2021 3:52 AM GMT (Updated: 2021-10-30T09:22:48+05:30)

எனது இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைபெற்று கொண்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிகாந்துக்காக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.

அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்த படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார் என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.

தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரஜினிகாந்த் இன்னும் ஓரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.  இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில்  குணமடைந்து  பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
 


Next Story