ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த 'ஜெய்பீம்' திரைப்படம்


ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த ஜெய்பீம் திரைப்படம்
x
தினத்தந்தி 12 Nov 2021 7:46 PM GMT (Updated: 2021-11-13T01:16:39+05:30)

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய்பீம்' திரைப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை,

டைரக்டர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. 

இந்தப் படத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர். 

இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். 

இந்த இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாக 'தி ஷஷாங் ரிடம்ஷன்' இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'டார்க் நைட்', '12 ஆங்கிரி மேன்' உள்ளிட்ட பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்தப் பட்டியலில் '3 இடியட்ஸ்', 'தாரே ஜமீன் பர்', 'லகான்', 'தங்கல்', 'அந்தாதூன்' உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இடம்பெறாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது முதன் முறையாக ஐஎம்டிபி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது 'ஜெய்பீம்' திரைப்படம். 9.6 புள்ளி ரேட்டிங்குடன்  முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளி ரேட்டிங்குடன் 2-ம் இடத்தில் உள்ளது. தி காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளி ரேட்டிங்குடன் 3-வது இடத்தில் உள்ளது.

Next Story