இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கொரோனா தாக்கத்தால் திரையுலக பிரபலங்களான மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், ஜெயராம், எஸ்.வி.சேகர், த்ரிஷா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.