கேரள கோர்ட்டில் 6 செல்போன்களை ஒப்படைத்த திலீப்


கேரள கோர்ட்டில் 6 செல்போன்களை ஒப்படைத்த திலீப்
x
தினத்தந்தி 1 Feb 2022 2:28 PM IST (Updated: 1 Feb 2022 2:28 PM IST)
t-max-icont-min-icon

திலீப்புக்கு கண்டனம் தெரிவித்த கோர்ட்டு செல்போன்களை ஐகோர்ட்டு பதிவாளரிடம் திலீப் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து திலீப் செல்போன்களை கோர்ட்டில் நேற்று ஒப்படைத்தார்.

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு 84 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகர் திலீப் மீது அவரது நண்பரும், இயக்குனருமான பாலசந்திரகுமார் பரபரப்பு புகார் கூறினார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ திலீப் செல்போனில் உள்ளது என்றும், விசாரணை அதிகாரியை திலீப் கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார் என்றும் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து போலீசார் திலீப் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் திலீப் 3 நாட்கள் ஆஜரானார். கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டும் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் குற்றப்பிரிவு போலீசார் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் திலீப் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், செல்போன்களை தர மறுத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து திலீப்புக்கு கண்டனம் தெரிவித்த கோர்ட்டு செல்போன்களை ஐகோர்ட்டு பதிவாளரிடம் திலீப் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து திலீப் செல்போன்களை கோர்ட்டில் நேற்று ஒப்படைத்தார். திலீப்பின் 3 செல்போன்கள், அவரது சகோதரர் அனூப்பின் 2 செல்போன்கள், சகோதரி கணவர் சுராஜின் ஒரு செல்போன் ஆகிய 6 செல்போன்கள் சீலிடப்பட்ட உறையில் வைத்து கேரள ஐகோர்ட்டு பதிவாளரிடம், ஒப்படைக்கப்பட்டது.


Next Story