கிருத்திக் ரோஷனின் புதிய காதலி
பாலிவுட் சினிமாவில் கடந்த 1970 காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களை தன்னுடைய கைவசம் வைத்திருந்தவர், ராகேஷ் ரோஷன். அதன்பிறகு 1990-களில் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தினார். நடிப்பையும் தொடர்ந்து வந்தார். இவரது மகன்தான் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் கிருத்திக் ரோஷன். ‘தூம்-2’, ‘கிரிஷ்’, ‘வார்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
இவர் கடந்த 2000-ம் ஆண்டில், சினிமாவில் பேஷன் டிசைனராக பணியாற்றி வந்த சுஷானே கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டின் முன்னாள் நடிகரும், தயாரிப்பாளருமான சஞ்சய் கானின் மகள்தான் இந்த சுஷானே கான். கிருத்திக் ரோஷன் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 14 ஆண்டுகள் சுமுகமாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, கடந்த 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த கிருத்திக் ரோஷன், சில நடிகைகளுடன் நட்பு கொண்டிருப்பதாக அடிக்கடி கிசு கிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில், மும்பையில் ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்த கிருத்திக் ரோஷனின் அருகில் ஒரு பெண் இருந்தார். அவரது கையை கிருத்திக் ரோஷன் இறுக்கமாக பிடித்திருந்தார்.
முக கவசம் அணிந்திருந்ததால் அந்தப் பெண்ணை அடையாளம் காண முடியவில்லை. ஓட்டலில் இருந்து ஒரு பெண்ணுடன் கிருத்திக் ரோஷன் வெளியே வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் அந்தப் பெண் நடிகை சபா ஆஷாத் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு ‘தில் கபாடி’ படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் கால் பதித்திருந்தார், சபா ஆஷாத். வெள்ளித் திரையில் இரண்டு படங்களும், 3 குறும்படங்களும் மட்டுமே நடித்திருக்கும் சபா ஆஷாத், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். கிருத்திக் ரோஷனும், சபா ஆஷாத்தும் காதலித்து வருவதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் பரபரக்கின்றன. இவர்களுக்குள் எப்படி காதல் உருவானது என்பதைப் பற்றி அறிய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story