சூப்பர் ஹீரோ படத்தில் வரலட்சுமி
தெலுங்கில் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் பிரசாந்த் வர்மா இயக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.
தனக்கான கதாபாத்திர தேர்வுகளில் மிகவும் கவனமாக இருப்பவர், வரலட்சுமி சரத்குமார். இவர் தென்னிந்திய மொழிகளான, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரது கதாபாத்திர தேர்வு அவரை, அந்தந்த மொழி மக்களிடம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழில் 5-க்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கும் வரலட்சுமி, பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தெலுங்கில் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் பிரசாந்த் வர்மா இயக்கும் புதிய படம் ‘ஹனுமான்.’ இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. அது ஒரு சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்டதாகும். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சாஜா கதாநாயகனாகவும், அம்ரிதா ஐயர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் பெயர், ‘அஞ்சனாத்ரி.’
இந்தப் படம் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. மார்ச் 5-ந் தேதி வரலட்சுமியின் பிறந்தாள். அதை முன்னிட்டு மார்ச் 4-ந் தேதி, ‘ஹனுமான்’ படத்திற்கான கன்னட மொழி முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை கன்னடத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும், கிச்சா சுதீப் வெளியிட்டார். அந்த போஸ்டரில், பட்டுசேலை கட்டி திருமண கோலத்தில், முகத்தில் கோபம் கொப்பளிக்க, கையில் தென்னங்குலையை வைத்தபடி, எதிரிகளை பந்தாடும் தொனியில் அவர் நிற்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, சூப்பர் ஹீரோ கதை கொண்ட இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், சூப்பர் பவர் கொண்ட வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story