'எங்களின் புதிய பயணத்தில் உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை': ஆதி - நிக்கி கல்ராணி
நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.
சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், ஆதி. இவர், பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார். இவருக்கும், ‘டார்லிங்’ என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ‘மரகத நாணயம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் துளிர்த்தது. இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றினார்கள். அதைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்கள். இதுபற்றி ஆதி, நிக்கி கல்ராணி ஆகிய இரண்டு பேரிடமும் கேட்டபோது, ‘‘என் திருமணம், காதல் திருமணமாகத்தான் இருக்கும்’’ என்று பதில் அளித்தார்கள். காதலிப்பவர் யார்? என்ற பெயரை கூற மறுத்தார்கள்.
இந்நிலையில், ஆதி - நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம், சென்னையில் ரகசியமாக நடந்தது. அதில் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டார்கள். இதனை இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.3.22... இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம். எங்களின் புதிய பயணத்தில் உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை" என்று பதிவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story