மலையாள நடிகர் சங்க மோதல்: 3 நடிகைகள் ராஜினாமா


மலையாள நடிகர் சங்க மோதல்: 3 நடிகைகள் ராஜினாமா
x
தினத்தந்தி 5 May 2022 2:03 PM IST (Updated: 5 May 2022 2:02 PM IST)
t-max-icont-min-icon

மலையாள நடிகர் சங்க மோதலில் 3 நடிகைகள் ராஜினாமா செய்தனர்.

மலையாள நடிகர் விஜய்பாபு மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை சமீபத்தில் போலீசில் புகார் அளித்தது பரபரப்பானது. ஏற்கனவே திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க மலையாள நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நடிகைகள் மாலா பார்வதி, சுவேதா மேனன், குக்கூ பரமேஸ்வரன் ஆகியோர் விஜய்பாபுவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் மோகன்லாலிடம் வற்புறுத்தினர். ஆனால் விஜய்பாபு தன் மீது குற்றம் இல்லை என்று தெரிய வருவதுவரை நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் இருந்து விலகி இருக்கப்போவதாக இ-மெயிலில் அனுப்பிய கடிதத்தை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டது.

இதற்கு விசாகா குழுவில் உள்ள 3 நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் பாபுவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்கள் பரிந்துரையை ஏற்காமல், அவரது ராஜினாமாவை ஏற்று வழியனுப்பி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று கண்டித்து மாலா பார்வதி விசாகா கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தார்.

தற்போது நடிகைகள் சுவேதா மேனன், குக்கூ பரமேஸ்வரன் ஆகியோரும் மலையாள நடிகர் சங்கத்தின் செயலை கண்டித்து விசாகா கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story