காரை அதிவேகமாக ஓட்டி நடிகைக்கு மிரட்டல் விடுத்த டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்


காரை அதிவேகமாக ஓட்டி நடிகைக்கு மிரட்டல் விடுத்த டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்
x

நடிகை வாடகை காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை மனவா நாயக். இவர் மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் இருந்து கார் புறப்பட்ட நிலையில் டிரைவர் செல்போனில் பேசியவாறு காரை ஓட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மனவா நாயக், கார் டிரைவரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளார்.

இதனால், போக்குவரத்து போலீஸ்காரர் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார். அப்போது, அந்த கார் டிரைவர் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை மனவா நாயக் தலையிட்டு போலீஸ்காரருடன் பேசி பிரச்சினையை தீர்த்தார்.

ஆனால், கார் டிரைவர் நடிகை மனவா மீது கோபப்பட்டு ஆத்திரத்தில் திட்டியுள்ளார். 500 ரூபாய் அபராதம் நீங்கள் கொடுப்பீர்களா? கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகையை மிரட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை மனவா, காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை வேகமாக இயக்கிய டிரைவர் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் வேறு பகுதிக்கு ஓட்டி சென்றார்.

இதையடுத்து, வாடகை கார் நிறுவன செயலியில் இது குறித்து நடிகை உடனடியாக புகாரை பதிவு செய்துள்ளார். உடனடியாக, வாடகை கார் நிறுவன செயலி ஊழியர் டிரைவரை தொடர்புகொண்டு காரை வேகமாக இயக்கவேண்டாம் என கூறியுள்ளார்.

பின்னர், காரை நிறுத்தும்படி நடிகை மனவா நாயக் டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை நிறுத்தாமல் டிரைவர் வெறொரு நபரை செல்போனில் அழைத்துள்ளார். இதனால், பதற்றமடைந்த நடிகை மனவா காரில் இருந்தவாறு கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார்.

பெண் காரில் இருந்தவாறு உதவி கோரி கூச்சலிடுவதை கண்ட பைக் மற்றும் ஆட்டோவில் சென்ற சிலர் வேகமாக சென்று காரை இடைமறித்து நடிகையை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் மற்றும் கார் எண்ணை நடிகை மனவா நாயக் தனது பேஸ்புக்கில் மும்பை போலீசை டேக் செய்து பதிவிட்டார். இதனை தொடர்ந்து கார் டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story