சோழர்களை தொடர்ந்து பல்லவர்களை பற்றிய படமாக உருவாகியுள்ள 'நந்திவர்மன்' - வைரலாகும் டீசர்


சோழர்களை தொடர்ந்து பல்லவர்களை பற்றிய படமாக உருவாகியுள்ள நந்திவர்மன் - வைரலாகும் டீசர்
x
தினத்தந்தி 15 Oct 2022 10:26 PM IST (Updated: 15 Oct 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

அறிமுக இயக்குனர் பெருமாள் வரதன் பல்லவர்களை பற்றிய படமாக 'நந்திவர்மன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சோழர்களை பற்றிய படமாக அமைந்தது. இந்த நிலையில் பல்லவர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. பல்லவ வம்சத்தின் புகழ்பெற்ற மன்னரான நந்திவர்மனின் வரலாற்றுக் குறிப்பைப் பற்றிய இந்த படத்திற்கு 'நந்திவர்மன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள இந்த படத்தில் 'காவல்துறை உங்கள் நண்பன்' புகழ் சுரேஷ் ரவி முக்கிய வேடத்தில் நடிக்க, ஆஷா கவுடா நாயகியாக நடிக்கிறார். மேலும் நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன் மற்றும் ஜே.எஸ்.கே.கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் பெருமாள் வரதன், மரகத நாணயம், ராட்சசன், புரூஸ் லீ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், கன்னி மாடம் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மன்னன் நந்திவர்மன் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வஞ்சகத்தால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் ஆட்சி செய்த முழு நிலமும் புதைக்கப்படுகிறது. இதையடுத்து அந்த காலத்திலிருந்து, அந்த இடத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் அமானுஷ்ய செயல்கள் நடைபெறுகின்றன.

அந்த இடத்தில் வசிப்பவர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இந்த நேரத்தில், நந்திவர்மன் மற்றும் அவரது ராஜ்ஜியத்தைப் பற்றி அறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு நிலத்தை அகழ்வாராய்ச்சி செய்ய அந்த இடத்திற்கு வருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த மர்மமான விஷயங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த டீசர் வைரலாகி வருகிறது.


Next Story