தாக்கத்தை ஏற்படுத்தாத 'தாகத்' - 8-வது நாளில் வெறும் ரூ.4,420 மட்டுமே வசூல்
கங்கனா ரனாவத்தின் ‘தாகத்’ திரைப்படம் 8-வது நாளில், வெறும் 4,420 ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தாகத்' திரைப்படம் கடந்த 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கங்கனா ரனாவத் ஆக்ஷன் நாயகியாக களமிறங்கி இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஆனால் 'தாகத்' திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் 'தாகத்' திரைப்படம் வெளியாகி 8-வது நாளான இன்று, வெறும் 4,420 ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இன்று இந்த படத்திற்கு 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானதாகவும், பல திரையரங்குகளில் படத்தை தூக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 'தாகத்' படக்குழு சோகத்தில் மூழ்கியுள்ளது.