திரைப்பட விமர்சகர் இளம் வயதில் மரணம்; கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் இரங்கல்
திரைப்பட விமர்சகர் மற்றும் வி.ஜே.வாக பணியாற்றிய கவுசிக் மாரடைப்பால் இளம் வயதில் மரணம் அடைந்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய பொழுதுபோக்கு ஊடகங்களில் ஒன்றான கலாட்டா மீடியாவில் வி.ஜே.வாக இருந்தவர் எல்.எம். கவுசிக் (வயது 36). திரைப்படங்களில் வரும் காட்சிகள், வசனங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பற்றி விமர்சனம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என அந்நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும், துயருறும் குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் ஆதரவுடனும் இருப்போம் என்றும் தெரிவித்து உள்ளது.
கவுசிக் மறைவு செய்தியை கேட்ட பல திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய தேவரகொண்டா, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செய்தியில், நம்ப முடியவில்லை. செய்தியை கேட்டு வார்த்தைகளே வரவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது மனமும் இணைந்துள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்து உள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உண்மையில் மனமுடைந்து போனேன். இந்த செய்தி உண்மையில்லை என்றே விரும்பினேன். டுவிட்டரிலும், ஒரு சில முறை நேரடியாக சந்தித்தும் உள்ளோம். என் மீது அளவற்ற அன்பும், ஆதரவும் காட்டியவர் என தெரிவித்து உள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட இரங்கல் செய்தியில், கடவுளே நம்ப முடியவில்லை. இரு தினங்களுக்கு முன்பு அவரிடம் பேசினேன். உண்மையில் வாழ்க்கையை கணிக்க முடியவில்லை. குறுகிய காலத்திலேயே என்னை விட்டு சென்று விட்டாய் நண்பரே என தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய தேவரகொண்டாவும், நடிகை அதிதி ராவ் ஹைத்ரி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கவுசிக் இறுதியாக, நடிகர் துல்கர் சல்மான், நடிகைகள் மிருணல் தாக்குர், ராஷ்மிகா மந்தனா நடித்த சீதாராமம் படத்தின் வசூல் பற்றிய செய்தியை டுவிட்டரில் வெளியிட்டார்.