"அரசியலில் நுழையும் எந்த எண்ணம் இல்லை" - நடிகர் விஷால் விளக்கம்
ஆந்திராவின் குப்பம் தொகுதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
2024-ல் நடைபெற உள்ள ஆந்திர சட்டமன்ற தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு போட்டியிட்டால், அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் விஷாலை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ஆந்திராவின் குப்பம் தொகுதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஷால் வெளியிடுள்ள டுவிட்டர் பதிவில்,
ஆந்திரப்பிரதேசத்தின் குப்பம் தொகுதியில் நான் அரசியலுக்கு வரப் போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. அரசியல் நுழைவு பற்றி பரவி வரும் தகவலை நான் முற்றிலும் மறுக்கிறேன். ஆந்திர அரசியலில் நுழைவதோ, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ தனக்கு எண்ணம் இல்லை.
இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் நுழைவு பற்றி யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. தனக்கு என்றும் சினிமா மட்டுமே, அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார்.