விஜய் படத்தில் வில்லியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்!


விஜய் படத்தில் வில்லியாக  நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்!
x

தளபதி 67 திரைப்படத்தில், வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகர்கள் பலருக்கும் பிடித்த இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அதற்கு இவரின் படங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. இதுவரை இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை இயக்கி உள்ளார். அந்த நான்கு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகிவிட்டன. அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனால் இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். ஆனால் இவர் கைவசம் தற்போது தளபதி 67, விக்ரம் 2, கைதி 2, இரும்புக்கை மாயாவி என நான்கு படங்கள் உள்ளன. இதில் அவர் முதலில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். தளபதி 67 படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகை சமந்தா இப்படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் சூர்யாவின் கேரக்டரைப் போல் இதுவும் அத்தனை கச்சிதமாக பொருந்தும் கேரக்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை சமந்தா ஏற்கனவே தி பேமிலி மேன் வெப் தொடரில் வில்லியாக நடித்திருந்தாலும், அவர் படத்தில் வில்லியாக நடிப்பது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.


Next Story