அஜித்துடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?
அஜித்தின் 62-வது படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் புதிய தகவல் பரவி உள்ளது.
அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இது அஜித்குமாருக்கு 62-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும் வலைத்தளங்களில் கசிந்து வருகின்றன.
நாயகியாக நடிக்க திரிஷா பெயர் முதலில் அடிப்பட்டது. பின்னர் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராயிடம் படக்குழுவினர் பேசி வருவதாக இந்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித்குமாரும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் 62-வது படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் புதிய தகவல் பரவி உள்ளது. தமிழ், தெலுங்கு, திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார். அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்து வந்தார். அது நிறைவேறுமா என்பது விரைவில் தெரியவரும்.