கலைக்குறை தொழில்நுட்பத்தால் தீர்ந்தது....எம்.ஜி.ஆர் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி


கலைக்குறை தொழில்நுட்பத்தால் தீர்ந்தது....எம்.ஜி.ஆர் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி
x

'மலரே மெளனமா' பாடல் பின்னணியில் எம்ஜிஆர், பானுமதி நடனம் ஆடுவது போன்று உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதன் மூலம் தனது கலைக்குறை தீர்ந்து விட்டதாக பாடலாசிரியர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், பானுமதி நடிப்பில் 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' நடித்து திரைப்படம், கடந்த1955-ம் ஆண்டு வெளியானது. டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படம். இப்படத்தில் 'மாசிலா என்னை காதலி' எனும் பாடலில் எம்ஜிஆர், பானுமதி இருவரின் நடன அசைவும், விழிகளால் பேசுவதும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையில் அப்பாடல் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவீன தொழில்நுட்பம் மூலம் எம்ஜிஆர், பானுமதியை இந்த காலக்கட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதாவது, அர்ஜூன், ரஞ்சிதா நடிப்பில் 'கர்ணா' எனும் திரைப்படம் வெளியானது. அப்படத்தில் 'மலரே மெளனமா' எனும் மெலடி பாடல், இன்று வரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறது. இந்த 'மலரே மெளனமா' பாடல் பின்னணியில், எம்ஜிஆர், பானுமதியை ஆட வைத்துள்ளனர்.

'மாசிலா என்னை காதலி' பாடல் நடன அசைவை, 'மலரே மெளனமா' பாடலுக்கு தகுந்த மாதிரி எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இது எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமின்றி 2கே கிட்ஸ் வரையில் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து பார்வைக்கு சென்றுள்ளது. 'மலரே மெளனமா' பாடலை எழுதியது வைரமுத்துதான்.

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, எம்ஜிஆருக்கு பாடல் எழுத முடியவில்லையே என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வைரமுத்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எங்கிருந்தோ

எனக்கொரு பாடல் வந்தது

வியந்தும் மகிழ்ந்தும் போனேன்

அலிபாபாவும்

40 திருடர்களும் படத்தில்

எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த

புகழ்பெற்ற பாடல் காட்சியோடு

நான் எழுதிய பாடல் ஒன்றைப்

பொருத்தியிருக்கிறார்கள்

எம்.ஜி.ஆருக்குப்

பாடல் எழுதவில்லையே

என்ற கலைக்குறை

தொழில்நுட்பத்தால் தீர்ந்தது

ஆனால்,

வேறொரு குறை வந்துவிட்டது

இதைக் கண்டு களிப்பதற்கு

எம்.ஜி.ஆரும் பானுமதியும்

இன்றில்லையே!

அந்த பதிவில், இவ்வாறு உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story