மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தி கொண்டாரா நடிகர் விஷால்?
மக்கள் திலகம் எம்ஜிஆரின் உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டது போல புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை,
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர், திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர். திரையுலகில் நாயகனாம வலம் வந்தவர் அண்ணாவால் அரசியலில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்திலும் தன்னை முதலில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், பின்னாளில் அஇஅதிமுக என்ற தனிக்கட்சி கண்டு மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றினார்.
அவர் மறைந்து 36 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை கோரும் அளவுக்கு, தனக்கென ஒரு வாக்கு வங்கியை இன்றளவும் பெற்றிருக்கிறார் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல.
மக்கள் திலகம் எம்ஜிஆரை கடவுளாக நினைத்து வணங்கும் தமிழக மக்களை இன்றளவும் கிராமங்களில் உள்ளனர்.ஏழை மக்கள் பலர் எம்ஜிஆரின் உருவத்தை தங்கள் கைகளிலும் தங்கள் இதயங்களிலும் பச்சை குத்திக் கொள்வர்.
இந்த நிலையில் எம்ஜிஆரின் உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக வரையப்பட்டதா? அல்லது உண்மையிலேயே அவர் பச்சை குத்திக்கொண்டரா? போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். எனவே இது அந்த படத்திற்கான விஷாலின் கெட்டப் என எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.