சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ் - வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டம்..!!
நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
கலிபோர்னியா,
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்ததாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு வருவாய் (ஏப்ரல் முதல் ஜூன் வரை ) அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 9,70,000 சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் காலாண்டை போல தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டிலும் அந்த நிறுவனம் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. இது மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தாவை புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஒரு கணக்கை உடைய பயனர்கள் தங்கள் கணக்குளை பகிர்ந்துகொள்வதும் வாடிக்கையாளர்கள் குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த நிறுவனம் மீண்டும் புதிய திட்டங்களை கையில் எடுத்து வாடிக்கையாளர்களை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகிறது. குறைந்த விலை சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை ஈர்க்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.