'அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்' - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ..!
'அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்' என்ற தலைப்பில் பொன்னியின் செல்வன் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'அருண்மொழி வர்மன்' கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான போது பலரும் 'அருள்மொழி வர்மன்' என்பது தான் சரியான பெயர் என பல கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு 'அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்' என்ற தலைப்பில் அருண்மொழி வர்மன் பெயர் விளக்கத்தையும் அவர் எப்படி ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்படுகிறார் என்பதை பற்றியும் வரலாற்றாசிரியர், எழுத்தாளர் உள்ளிட்ட சிலர் விவரிக்கும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படக்குழுவும் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு படக்குழு 'சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்' என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.