திரையுலகில் 47- ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்...! ஆபூர்வ ராகம் தொடங்கி ஜெயிலர் வரை...!


திரையுலகில் 47- ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்...! ஆபூர்வ ராகம் தொடங்கி ஜெயிலர் வரை...!
x
தினத்தந்தி 16 Aug 2022 4:44 PM IST (Updated: 16 Aug 2022 5:15 PM IST)
t-max-icont-min-icon

பஸ் நடத்துனராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் கலைஞராக வலம் வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அறிமுகமான சாதாரண பஸ் நடத்துனராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் கலைஞராக வலம் வருகிறார்.

இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பணியாற்றியுள்ளார். இவருக்கு இந்திய ரசிகர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அரசின் உயர் விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண், தாதா சாகேப் விருது என பல விருதுகளை வென்றுள்ள இவர், இந்தியாவின் முக்கிய பிரபலமாக அறியப்படுகிறார். ஸ்டைலான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு என ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து தமிழ் திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்னும் பட்டத்தினை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் நாயகனாக நடிக்க வாய்ப்பினை பெற்று பல படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்பயணத்தில் சுமார் 175 திரைப்படங்களுக்கு மேல் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.

இயக்குனர் கே. பாலச்சந்தரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இத்திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பிரபலமானது. நடிகை ஸ்ரீவித்யாவின் கணவராக நடித்த இவர், இப்படம் வெளியானதும் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. பல பத்திரிகைகளில் இவரை பற்றிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து துணை நடிகராக பல கதாபாத்திரம் மற்றும் வில்லனாக நடித்து வந்துள்ள இவர், "சிலக்கம்மா செப்பிந்தி" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமாகினார். இத்திரைப்படமே ஹீரோவாக இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு பின்னர் தமிழில் பல படங்களில் நடித்து வந்துள்ள இவர், இயக்குனர் பாலச்சந்தரின் "மூன்று முடிச்சு" திரைப்படம் இவரின் திரைவாழ்வில் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த முள்ளும் மலரும், அவள் அப்படி தான், பில்லா, அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகிய படங்கள் இவருக்கு சினிமாவில் ஒரு முக்கிய படங்களாக அமைந்துள்ளது.

தனது திரைப்பட தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், பின்னர் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஹீரோவாக இவர் நடித்த முள்ளும் மலரும், பில்லா, முரட்டு காளை, ஜானி, தில்லு முல்லு, மூன்று முகம், காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன்,பணக்காரன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

அழுத்தமான கதைக்களம், ஆக்‌ஷன் என பயணித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தால் முழுநீள நகைச்சுவைப் படத்திலும் நடித்து அசத்த முடியும் என நிரூபித்த திரைப்படம் தில்லு முல்லு. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இப்போதும் ரசிகர்களிடையே வரவேற்புண்டு.

ரஜினிகாந்தின் 100-வது படமான "ஸ்ரீ ராகவேந்திரர்'', ரஜினி அதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. தனக்கே உரித்தான ஸ்டைல்களையும், அதிரடி சண்டைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார். இந்தப் படத்தில், ரஜினி நடிக்கவே இல்லை. ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார். இளைஞனாக, திருமணம் ஆனவராக, இளம் துறவியாக, நடுத்தர வயதுடையவராக, முதியவராக... இப்படி பல தோற்றங்களில் தோன்றி நடிப்பில் புதிய உயரத்தைத் தொட்டார். 1-1-1985-ல் வெளிவந்த இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது.

ரஜினி நடித்ததெல்லாம் வெற்றி எனும் நிலை உருவானது. எஜமான், தளபதி, அண்ணாமலை, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்த அவர் படங்களின் வெற்றி வசூல் மன்னனாக அவரை உருவெடுக்க வைத்தது.

இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் அசராமல் எழுந்து வெற்றிப் பயணத்தைத் தொடர அவர் ஒருபோதும் தவறியதே இல்லை. அதனால் தான், எந்திரன், கபாலி, 2 பாயிண்ட் ஓ, பேட்ட, அண்ணாத்த என அவரது படங்கள் இப்போதும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு காலத்திலும் பல நடிகர்களுடன் போட்டியிட்டு வென்ற ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என்னும் பட்டத்தின் மூலம் தொடர்ந்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.

'அண்ணாத்தே' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு ரஜினிகாந்தின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நடிகை பிரியங்கா அருள் மோகன் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தற்போது தன்னுடைய 47வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் #47YearsOfRajinism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

47 ஆண்டுகளில் தான் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார். இது இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத ஒரு சாதனையாகும். சினிமாவில் ரஜினிகாந்த் 47 ஆண்டுகள் நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Next Story