பிரதமர் மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் பதில்
பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ஜானராகவே இருக்கிறது. பெரியார், காமராஜர், கிரிக்கெட்டர் தோனி, நடிகை சாவித்ரி எனப் பல ஜாம்பவான்களின் கதைகள் படமாகியிருக்கிறது.
நடிகர் சத்யராஜ் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். பாகுபலி படத்தில் நடித்த பிறகு பான் இந்தியா அளவில் பிரபலமானார். அவரது கட்டப்பா கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது.
நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இது முதல்முறையல்ல 2019-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் முதலில் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கினார் ஆனால் அந்த திரைப்படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.
பிரதமர் மோடியின் பயோபிக் உருவாக உள்ள நிலையில், இந்த படத்தில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என்கிற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. நடிகர் சத்யராஜ் இதற்கு முன்பு பெரியாரின் பயோபிக்கில் பெரியாராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரிஸ்ட்டான சத்யராஜ் மோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாக வெளியான தகவல் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது..
இந்நிலையில், இது குறித்து பேசிய நடிகர் சத்யராஜ், "எனக்கும், இது புது செய்தி. மோடி பயோபிக்கில் நடிக்க கேட்டு யாரும் என்னிடம் பேசவில்லை. இப்படி யாரோ எதையோ கிளப்பிவிட்டு விடுவார்கள்.வாய்ப்பு வந்தால் பின்னர் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதா ஏகப்பட்ட படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார்" என்றார்.
ஏற்கனவே, 2007ல் வெளியான 'பெரியார்' படத்தில் சத்யராஜ் நடித்தார். அதில், நடித்திருக்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய மேடை பேச்சுகளில் சத்யராஜ் பெரியாரைப் பற்றி பேசாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.