கருவை கலைக்க சதி செய்கிறார் - சீரியல் நடிகை மீது கணவர் புகார்
சீரியல் நடிகரான தன் கணவர் தன்னை தாக்கி துன்புறுத்தியதாக சீரியல் நடிகை புகார் அளித்திருந்தார்.
சென்னை,
சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து அறிமுகமானவர் அர்ணவ். இவரை போலவே பல சீரியல்களில் நடித்து அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீ. சீரியலில் நடித்தபோது அர்ணவை திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நைனா முகமது என்ற அர்ணவை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை நடிகை திவ்யா காதலித்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இவருவருக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்து மத முறைப்படியும், இஸ்லாமிய மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை திவ்யாவை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பிறகு அர்ணவ் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், கணவர் அர்ணவ் நேற்று தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் நடிகை திவ்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கணவர் தாக்கியதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு தன் கரு கலைந்திருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக மருத்துவமனையில் இருந்தவாறு நடிகை திவ்யா இன்று வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை திவ்யா தன் கணவர் தன்னை தாக்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் நடிகர் அர்ணவ் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தார். அதில், தானும், திவ்யாவும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி ஒரு குழந்தை உள்ளது தற்போது தான் தனக்கு தெரியும் எனவும், இருந்தாலும், அவருடன் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் தற்போது நான் வெறோருவருடன் தொடர்பில் உள்ளதாக திவ்யா தன்னை சந்தேகப்படுவதாக அந்த புகாரில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தற்போது போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நடிகர் அர்ணவ் போரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ணவ் கூறுகையில், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் நான் அளித்த புகார் என்னவென்றால், மருத்துவமனையில் என் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் நேற்று மாலை 6.30 மணிக்கு எனக்கு தெரியும். ஆனால், என் மனைவி நேற்று இரவு நான் அவரை கடுமையாக தாக்கியதாகவும், அதனால் கர்ப்பிணியான தனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசிடம் கூறியுள்ளார்.
ஆனால், நேற்று காலை 11 மணிக்கே நான் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டேன். அதற்கு சிசிடிவி ஆதாரம் உள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு நான் வீட்டிற்கு உள்ளே வருவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இப்போது, அவர் தவறான நண்பர்களை வைத்துக்கொண்டு தவறான நோக்கத்தில் சென்றுகொண்டுள்ளனர். கருவை கலைக்க திவ்யா தற்போது சதி செய்கிறாரோ? என்று எனக்கு தோன்றுகிறது. அந்த சதி என்ன என்பது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் நான் கோரிக்கை கொடுத்துள்ளேன். எனக்கு என் குழந்தை வேண்டும். அந்த கருவை அழிக்கக்கூடாது. நண்பர்களை வைத்துக்கொண்டு திவ்யா என்ன திட்டம் திட்டுகிறார் என்று எனக்கு தெரியவில்லை.
விவகாரத்து வாங்க வேண்டும் என கூறி நான் அவரிடம் இதுவரை சண்டைபோட்டது இல்லை. மன சங்கடங்கள், மன வருத்தங்கள் உள்ளது. அதற்காக நாங்கள் பேசாமல் இருந்துள்ளோம். ஆனால், எனக்கு குழந்தை வேண்டாம் என்று நான் இதுவரை கூறியதில்லை. எனக்கு அந்த குழந்தை வேண்டும். எனக்கு நீதி கிடைக்கவேண்டும்.
திவ்யாவின் நண்பர் ஒருவர் அவரை தவறாக வழிநடத்துகிறார் என்று தோன்றுகிறது. அந்த நபர் என்னை மிரட்டுகிறார். குழந்தையை காப்பாற்ற வேண்டும். கருவை கலைக்கக்கூடாது. ரத்தக்கசிவோடு தான் மருத்துவமனைக்கு வந்தாரா? அல்லது கருவை கலைக்க தான் மருத்துவமனைக்கு வந்தாரா? என்பது சிசிடிவி காட்சிகளை பார்த்தால் தெரிந்துவிடும்.
நான் அவரை கீழே தள்ளிவிட்டதாக திவ்யா கூறுகிறார். நான் தள்ளிவிட்டேன் என்றால் அதற்கான சிசிடிவி ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். சம்பவ இடத்திலேயே நான் இல்லை.
வெறோரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு உள்ளதாக திவ்யா நினைத்துக்கொண்டிருக்கிறார். அதுபோன்று எதுவும் கிடையாது. அனைவரும் நண்பர்கள் தான். நானும் சினிமாவில் உள்ளேன்... அவரும் சினிமாவில் உள்ளார். பசங்க பெண்களிடம் பேசக்கூடாதா? பெண் பசங்களிடம் பேசக்கூடாதா? இது எல்லாம் சிறு கருத்துவேறுபாடுகள். இது சிறிது சிறிதாக வளர்ந்து திவ்யா அவரது நண்பரிடம் கூறி அவரின் பின்னணியில் தான் என் மீது போலி புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உண்மை சிறிது நாளில் வெளியே வரும். நான் உண்மையிலேயே திவ்யாவை தாக்கினேனா? என்பது விசாரணையில் தெரிந்துவிடும்.
திவ்யா தான் நேற்று என்னை அடித்தார்... கன்னத்தில் கூட வீக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு வெளியே போய்விட்டேன். காலை வரும்போது எங்கே சென்று வந்தாய் யாருடன் சென்று தப்பு செய்துவிட்டு வருகிறாய் அப்படியேல்லாம் பேசியுள்ளார்' என்றார்.