ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதுதான் இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால் - நடிகர் நானி
எல்லா நடிகர்களும் காமெடி, காதல் கதை என்று அனைத்து விதமான படங்களிலும் நடிக்க வேண்டும் என்று நடிகர் நானி கூறியுள்ளார்.
தமிழில் 'ஆஹா கல்யாணம்', 'வெப்பம்', 'நான் ஈ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நானி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் சினிமா குறித்து நானி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"சமீபத்தில் வெளியாகும் படங்கள் அதிரடி சண்டை படங்களாகவே இருக்கின்றன. காதல், காமெடி உள்ளிட்ட வேறு மாதிரியான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனது சிறு வயதில் அனைத்து விதமான கதையம்சத்திலும் படங்கள் வந்தன. எல்லா வகையான படங்களையும் ரசித்து பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்க செல்வதற்கு அப்போது நிறைய காரணங்கள் இருத்தன. ஆனால் இப்போது ஒரே மாதிரியான படங்களில் நடித்து ரசிகர்களை போரடிக்கவும், வெறுக்கவும் வைக்கிறோம்.
எல்லா நடிகர்களும் காமெடி, காதல் கதை, எமோஷனல், அதிரடி சண்டை என்று அனைத்து விதமான படங்களிலும் நடிக்க வேண்டும். படம் எவ்வளவு வசூல் பார்த்தது என்பதை விட ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதுதான் இப்போது நமக்குள் இருக்கும் மிகப்பெரிய சவால்." இவ்வாறு அவர் கூறினார்.