மீண்டும் மோதும் விஜய்- அஜித் படங்கள்...!


மீண்டும் மோதும் விஜய்- அஜித் படங்கள்...!
x
தினத்தந்தி 19 Jan 2023 1:38 PM IST (Updated: 19 Jan 2023 1:39 PM IST)
t-max-icont-min-icon

அஜித் நடிக்கும் ஏகே 62 படமும், விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாகும் வாய்ப்பு உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' திரைப்படமும் ஜன.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் பொங்கலை வரவேற்றனர்.

விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும், வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக வெளியானதால், ரசிகர்கள் யாரின் படம் அதிக வசூல் பெறுகிறது என்பதை தினமும் கவனித்து வருகின்றனர்.

அடுத்த வாரத்துக்குள் எந்தப் படம் அதிக வசூல் பெற்றுள்ளது என்பது தெரிந்துவிடும். இப்போது வாரிசு 210 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியானது. அதே போல துணிவு படமும் 200 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தின் நாயகி யார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த லிஸ்ட்டில் காஜல், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, என பலரது பெயர்கள் அடிபடுகிறது. விரைவில் யார் யாரெல்லாம் ஏகே 62-வில் இணைவார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்

அதே நேரம் நடிகர் விஜய்யும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 67வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தான் ஒரு சண்டைக்காட்சியில் நடித்ததாகவும் அதில் விஜய்யை அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அஜித் நடிக்கும் ஏகே 62 படமும், விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாகும் வாய்ப்பு உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் "நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story