‘ரீமேக்’ ஆகும் கன்னடப் படம்


‘ரீமேக்’ ஆகும் கன்னடப் படம்
x
தினத்தந்தி 21 April 2018 7:00 AM GMT (Updated: 21 April 2018 7:00 AM GMT)

இந்திய திரையுலகையே ‘லூசியா’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பவன்குமார்.

அடிதடி, ரத்தம், கமர்ஷியல் என்று போய்க் கொண்டிருந்த கன்னட சினிமாவை சற்றே நிறுத்தி, தன்னை நிதானமாக பார்க்க வைத்தவர் இயக்குனர் பவன்குமார். ஒரு மாத்திரையையும், அதன் மூலம் உண்டாகும் கனவையும் கொண்டு ஒரு அதிரிபுதிரி வெற்றியை அளித்த இயக்குனர் அவர்.

பவன்குமாரின் இயக்கத்தில் கன்னடத்தில் அடுத்ததாக வெளியான படம் தான் ‘யூ-டர்ன்’ இது மர்மங்கள் நிறைந்த ஒரு திரில்லர் படம். 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’, ‘இவன் தந்திரன்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இரண்டு கிலோமீட்டர் சுற்றிவர வேண்டும் என்பதற்காக, போலீசார் போட்டு வைத்திருக்கும் பேரிகார்டர், கற்கள் போன்ற தடுப்புகளை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு, யூ-டர்ன் போட்டுத் திரும்பும் நபர்கள், நாம் அன்றாடம் காணும் வாடிக்கையாளர்கள். அவர்களைப் பற்றி கட்டுரை எழுத நினைக்கும் ஒரு பெண் எழுத்தாளர், தான் கண்ட யூ-டர்ன் அடித்த வண்டிகளின் எண்களை எழுதி, அந்த நபர்களைக் காண்பதற்காக அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார். அப்படி அவர் தேடிச் சென்ற முதல் நபர் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் போலீசார் அந்த பெண் எழுத்தாளர் மீது சந்தேகம் கொள்கிறது. அதற்கு ஏற்றாற்போல், தன் டைரியில் அந்த பெண் எழுத்தாளர் எழுதி வைத் திருக்கும் யூ-டர்ன் பார்ட்டிகள் 10 பேரும் இறந்து போவது போலீசாரின் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது. நடந்தது என்ன? என்பதை மர்மங்களோடு சொல்வதுதான் இந்த ‘யூ-டர்ன்’ படத்தின் கதை.

கன்னடத்தில் வெளியான இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் இயக்க முடிவு செய்திருக்கிறார், கன்னடத்தில் இயக்கிய பவன்குமார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் செய்த கதாபாத்திரத்தை தெலுங்கு மற்றும் தமிழில் சமந்தா செய்கிறார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகர் ஆதி, சப்-இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்தை கன்னடத்தில் ரோஜர் நாராயண் என்பவர் செய்திருந்தார். அவரைப் போலவே தன்னுடைய நடிப்பும் இருந்து விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய கேரக்டரை உள்வாங்கிக்கொண்டு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி எடுத்து வருகிறாராம் ஆதி. 

Next Story