வலுவான கதாபாத்திரத்தில் வேதிகா


வலுவான கதாபாத்திரத்தில் வேதிகா
x
தினத்தந்தி 15 Nov 2019 9:09 AM GMT (Updated: 15 Nov 2019 9:09 AM GMT)

மும்பையில் பிறந்திருந்தாலும், நடிகை வேதிகா அறிமுகமானது கோலிவுட்டில்தான்.

2006-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ படத்தில் நடிகை வேதிகா அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருந்தாலும், பாலிவுட் அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அதுவும் தற்போது கைகூடி வந்திருக்கிறது. ஆம்.. பாலிவுட்டில் ‘தி பாடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் வேதிகா. இந்தப் படத்தை மலையாளத்தில் திரில்லர் படங்களை எடுத்து பெயர் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மலையாளத்தில் உருவாகி பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குனர் இவர். இவருக்கும் பாலிவுட்டில் இதுதான் முதல்படம். ‘தி பாடி’ திரைப்படமும் ஒரு திரில்லர் வகையைச் சேர்ந்ததுதான். அதுவும் உலக அளவில் திரில்லர் படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்த ‘எல் கியூர்போ’ திரைப்படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். ஸ்பானீஷ் மொழியில் வெளியான ‘எல் கியூர்போ’வை அதிகாரப்பூர்வமாக பெற்று பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார்கள். மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் இருந்து ஒரு உடல் காணாமல் போகிறது. அதைத் தேடும் காவல்துறையினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்று திரில்லராக இந்தப் படம் இருக்கும். பாலிவுட்டின் ‘தி பாடி’ திரைப்படத்தில் இம்ரான் ஹாஸ்மி, ரிஷி கபூர், ஷோபிதா துலிபாலா, வேதிகா ஆகியோர் நடிக்கிறார்கள். டிசம்பர் 13-ந் தேதி வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் தனக்கு நிரந்தர இடத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார், வேதிகா.

Next Story