சினிமா துளிகள்

வாரிசுகளின் ஆதிக்கம் + "||" + Dominance of heirs

வாரிசுகளின் ஆதிக்கம்

வாரிசுகளின் ஆதிக்கம்
தெலுங்கு சினிமாத் துறையானது, வாரிசு அரசியல் போல, வாரிசு திரையுலகத்தால் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறது என்றால் அது மிகையல்ல.
இங்கு ஒரு சில குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமே தலைதூக்கி நிற்கும். தனிப்பட்ட முறையில் எந்த ஒரு நடிகரும் பெரிய அளவில் வெற்றிபெற்று வருவது என்பது எப்போதாவது நடக்கும் அத்தி பூத்தாற்போன்ற விஷயம்தான். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, கிருஷ்ணம் ராஜூ போன்ற மூத்த நடிகர்களின் குடும்ப வாரிசுகளே இன்று தெலுங்கு திரையுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். கணக்கெடுத்தால், மேற்கண்ட நடிகர்களின் நேரடி வாரிசுகள், சகோதர- சகோதரிகளின் மகன், மகள்கள், மாமன், மைத்துனர் போன்றவர்கள்தான், தெலுங்கு திரையுலகின் பெரிய நட்சத்திர பட்டாளக் கூட்டமாக இருப்பார்கள்.

அந்த வரிசையில் இப்போதும் மேலும் ஒரு வாரிசு நடிகர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். இவர் வந்திருப்பது, மூத்த நடிகரான கிருஷ்ணாவின் குடும்பத்தில் இருந்து. அதாவது நடிகர் கிருஷ்ணாவின் மகள் பத்மாவதியின் மகன் அசோக் கல்லா தான் அந்த அறிமுக நடிகர். இவர் நடிக்கும் படத்தின் பூஜை, சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகிறார். கதாநாயகியாக நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் பூஜைக்காக ரூ.25 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாம். அசோக் கல்லாவின் தந்தை ஜெயதேவ் கல்லா. தொழிலதிபரான இவர் தற்போது குண்டூர் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், மிகப்பெரிய கோடீஸ்வரர். அந்த பணவசதியால்தான், தன் மகனின் பட பூஜைக்கு மட்டுமே சிலபல லட்சங்களை வாரி இறைத்திருக்கிறார். இந்த பட பூஜையில் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றிருக்கின்றனர். இளம் நடிகர் ராம்சரண், படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்திருக்கிறார். வெகு விரைவில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு திரையில் தரிசனம் தரப்போகும் அசோக் கல்லாவின் தாய்மாமா தான், டோலிவுட் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் மகேஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.