சினிமா துளிகள்

நடிகரின் நினைவலைகளை கொண்டாடும் கிராமம் - கிராமத்தில் அமைந்திருக்கும் நடிகர் ஜெயனின் சிலை + "||" + Memoirs of the actor Celebrating village

நடிகரின் நினைவலைகளை கொண்டாடும் கிராமம் - கிராமத்தில் அமைந்திருக்கும் நடிகர் ஜெயனின் சிலை

நடிகரின் நினைவலைகளை கொண்டாடும் கிராமம் - கிராமத்தில் அமைந்திருக்கும் நடிகர் ஜெயனின் சிலை
மலையாள திரை உலகில் கட்டுக்கோப்பான உடல்வாகுடன் கம்பீரமாக உலாவந்தவர் நடிகர் ஜெயன்.
‘சாபமோட்சம்’ என்ற படத்தில் அறிமுகமாகி ‘கோளிளக்கம்’ என்ற சினிமாவில் அஸ்தமித்துவிட்ட அவர் அகால மரணமடைந்து 40 வருடங் கள் ஆகிவிட்டன. சென்னையில் நடந்த விபத்தில் ஜெயன் மரணமடைந்தார். அவர் ஓல என்ற தனது சொந்த கிராமத்து மக்களின் மனதில் இன்றும் நிறைந்திருக்கிறார். அங்கு அவருக்கு முழு உயர சிலை அமைத்து ரசிகர்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த கிராமம் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது.

ஜெயனின் தந்தை மாதவன் பிள்ளை. இவர் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமைப்பட்ட சத்திரங்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார். அதனால் அவர் சத்திரம் மாதவன் பிள்ளை என்று அழைக்கப்பட்டார். ஜெயனின் தாயார் பாரதி அம்மாள்.

மாதவன் பிள்ளையின் மரணத்திற்கு பிறகு குடும்பம் மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளானது. பசுக்களை வளர்த்து பால் விற்பனை செய்து அதில் கிடைத்த வருமானத்தில் தாயார் குடும்ப செலவுகளை சமாளித்ததோடு பாலும், வெண்ணெய்யும் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாகவும் வளர்த்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை படித்த ஜெயன், சிறுவயது பருவத்திலேயே விளையாட்டில் ஜொலித்திருக்கிறார். அப்போதே நாடகங்களிலும் நடித்துவந்திருக்கிறார்.

ஜெயனுடன் படித்த கேசவன் நாயர் என்பவர் ஜெயனின் துணிச்சலை சிலிர்ப்போடு நினைவுகூர்கிறார். “எங்கள் கிராமத்தின் அருகில் இருக்கும் நீர்நிலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு படகுகள் செல்லும். ஒருமுறை படகு கவிழ்ந்து இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கிவிட்டனர். அதை பார்த்த ஜெயன் உடனே நீரில் குதித்து அந்த குழந்தைகளை காப்பாற்றினார். அப்போது அவர் என்.சி.சி. மாணவராகவும் இருந்தார். அவரது துணிச்சலை பாராட்டி பள்ளியில் விழா நடத்தி கவுரவித்தார்கள்” என்கிறார்.

குடும்பத்தில் பணக்கஷ்டம் நிலவியதால், இளமையிலேயே ஜெயன் கடற்படையில் சேர்ந்திருக்கிறார். அங்கு கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை முறைக்கு அவர் பழகியிருக்கிறார். கடற்படை பணியில் இருந்து விலகிய பின்பு எர்ணாகுளத்தில் வசித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உருவாகியிருக்கிறது.

ஜோஸ் பிரகாஷ் என்பவர் உலர்சலவை நிலையம் ஒன்றை நடத்திவந்திருக்கிறார். அங்கு சினிமாவோடு தொடர்புடையவர்கள் நிறைய பேர் வருவார்கள். அவர்களை அணுகி சினிமா வாய்ப்புகளை பெற ஜெயன் முயற்சித்திருக்கிறார். அதற்கு ஜோஸ் பிரகாஷ் துணைபுரிந்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் சாபமோட்சம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜெயனுக்கு கிடைத்திருக்கிறது. அடுத்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க நடிகை ஜெயபாரதி உதவியுள்ளார். அவர் ஜெயனின் உறவினராவார். முதலில் வில்ல னாக நடிக்க ஆரம்பித்தார். ரசிகர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக விரைவில் கதாநாயகன் ஆனார்.

ஓல கிராமத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும் விவேகானந்தன், “ஜெயன் அவரது வீட்டிலே ஒரு ஜிம் வைத்திருந்தார். தினமும் தவறாமல் அங்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்வார். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு அவர் உடற்பயிற்சி செய்வதை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். நாங்கள் அதனை தினமும் வியப்புடன் பார்ப்போம். எங்களை அவர் துரத்தமாட்டார். ஆனால் உடற்பயிற்சி கருவிகளை மட்டும் தொட அனுமதிக்கமாட்டார்” என்கிறார்.

ஜெயனின் வீடு இருந்த இடத்தை மருத்துவமனை நிர்வாகம் ஒன்று வாங்கி, கார் நிறுத்தும் பகுதியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ஜெயனின் மரணத்திற்கு பிறகு அது பலருக்கு கைமாறியிருக்கிறது. ஓல கிராமத்தின் சந்திப்பில் ‘ஜெயன் மெமோரியல் கிளப்’ செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் சார்பாக வருடந்தோறும் அவரது நினைவு நாளை கொண்டாடுகிறார்கள். அந்த கிராமத்து மக்கள் அனைவரும் பணம் வசூலித்து ஜெயனின் 7 அடி உயர சிமெண்ட் சிலையை நிறுவியிருக்கிறார்கள். ஜெயன் நிற்பது போன்ற தத்ரூபமான அந்த சிலைக்கு தங்கநிறம் பூசியிருக்கிறார்கள். அந்த கிராமத்தை உள்ளடக்கிய பஞ்சாயத்து நிர்வாகம் ஜெயனின் பெயரில் கலை அரங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நினைவு அறை ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் அவைகளின் திறப்பு விழா நடந்திருக்கிறது.

சினிமாவில் ஜெயன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவ்வப்போது தனது சொந்த கிராமத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது நண்பர்களோடு அஷ்டமுடி காயலுக்கு வந்து கட்டுமரத்தில் பயணிப்பது, மீன் பிடிப்பது என்று பொழுதைப்போக்குவாராம்.

கேரளாவில் இப்போதும் ஜெயனின் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஓல கிராமத்திற்கு வந்து ஜெயனின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். அந்தப்புரம் என்ற சினிமாவில் ஜெயனுடன் நடித்தவர் தாமஸ் சாக்கோ. இவர் ஒவ்வொரு நினைவு நாளிலும் அங்கு வந்து சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். “ஜெயனுடன் ஒரு சினிமாவில் நடித்தது எனது அதிர்ஷ்டம்” என்றும் சொல்கிறார்.

1980 நவம்பர் 16-ந்தேதி ஓல கிராமத்து மக்களால் மறக்க முடியாத நாள். அன்று அங்குள்ள தியேட்டரில் தீபம் என்ற சினிமா திரையிடப்பட்டிருந்தது. எல்லோரும் ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சினிமா நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் ஆத்திரத்தில் கூச்சல் எழுப்பினார்கள். அப்போது திரையில் ஒரு அறிவிப்பு வெளிப்பட்டது. அதில் “சென்னையில் நடந்த விபத்தில் நடிகர் ஜெயன் மரணமடைந்துவிட்டார்” என்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் அனைவரும் தியேட்டரிலே கதறி அழுது கண்ணீர்விட்டார்கள்.

ஜெயன் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், அவர் இன்றும் தனது சொந்த கிராமத்து மக்களின் நினைவில் கதாநாயகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.