பிபின் ராவத் மரணம் குறித்த விமர்சனத்துக்கு கண்டனம்- இந்து மதத்துக்கு மாறிய மலையாள சினிமா இயக்குனர்


பிபின் ராவத் மரணம் குறித்த விமர்சனத்துக்கு கண்டனம்- இந்து மதத்துக்கு மாறிய மலையாள சினிமா இயக்குனர்
x
தினத்தந்தி 12 Dec 2021 5:09 PM GMT (Updated: 12 Dec 2021 5:09 PM GMT)

எதிர்மறையாக கருத்து கூறி வருபவர்களுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காதது தன்னை காயப்படுத்தியதாக இயக்குனர் அலி அக்பர் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்:

இந்திய முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 8-ந் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான அலி அக்பர் இதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

நாட்டின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் மரணம் குறித்து தேவையற்ற கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எனது பதில் நான் முதலில் இந்தியன் என்பதுதான். எதிர்மறையாக கருத்து கூறி வருபவர்களுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காதது என்னை காயப்படுத்தியுள்ளது. பிபின் ராவத் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தவர். எனவே அவரை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பதாகும். எனவே நான் இந்து மதத்துக்கு மாறுகிறேன். எனது பெயரை ராம் சிங் என மாற்றிக்கொண்டேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

அவர் இவ்வாறு கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக அவரை விமர்சித்தும், ஆதரித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரபல திரைப்பட இயக்குனர் இந்து மதத்துக்கு மாறுவதாக கூறி இருப்பது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story