தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் - யாஷ் பெருமிதம்


தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் - யாஷ் பெருமிதம்
x
தினத்தந்தி 8 April 2022 5:49 PM GMT (Updated: 8 April 2022 5:49 PM GMT)

சென்னையில் நேற்று நடந்த கே.ஜி.எப்-2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் யாஷ் தமிழ் திரையுலகினர் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கே.ஜி.எப்-2’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் பேசுகையில், ''மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். சண்டைப்பயிற்சி இயக்குனர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார். அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது. இதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.

வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.

பாடலாசிரியர் மதுரகவியின், ஒளிப்பதிவாளர் புவன், நடிகை ஈஸ்வரி ராவ், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி என அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. கே.ஜி.எ.ப் படத்தை பொருத்தவரை இயக்குனர் பிரசாந்த் தான் பலம். தயாரிப்பாளர் விஜய் அவர்களும் இதற்கு பக்கபலமாக இருந்தார். இந்த இருவரும் தான் கே.ஜி.எ.ப் உருவாக காரணமாக இருந்தனர். ஏப்ரல் 14ஆம் தேதியன்று கேஜிஎப் 2 வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

Next Story