சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்


சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்
x
தினத்தந்தி 26 April 2022 6:02 PM GMT (Updated: 26 April 2022 6:02 PM GMT)

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். எம்.ராஜேஷ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா, சதிஷ், ரோபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் ரூ.4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் தனக்கு அளித்த ரூ.11 கோடி சம்பளத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வருமான வரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அவர் தனக்கு மீதமுள்ள சம்பள பாக்கியை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்ய தடை விதிக்குமாறும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்த பதில் மனுவில் 'மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த படத்தின் கதையே தனக்கு பிடிக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே அந்த படத்தை தயாரித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் உண்மைகளை மறைத்து சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி சுந்தர், சம்பள பாக்கி பிரச்சனைக்கு சமரச தீர்வாளரை நியமித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக உள்ள 3 படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Next Story