ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் பிரபல நடிகை


ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் பிரபல நடிகை
x
தினத்தந்தி 29 April 2022 4:51 PM GMT (Updated: 2022-04-29T22:21:21+05:30)

ரஜினியின் 169-வது படத்தில் வில்லியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்சன் இதற்குமுன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் ரஜினியின் தலைவர் 169 படம் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியிருந்தது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருவதாகவும், இன்னொரு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை ஓரிரு மாதங்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனையும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் 1999-ல் வெளியாகி வெற்றி பெற்ற படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவரது நீலாம்பரி வில்லி கதாபாத்திரம் பேசப்பட்டது. ரஜினியின் 169-வது படத்திலும் ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவே நடிக்க இருப்பதாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Next Story