உண்மையில் நான் மோசமானவன்தான்- மிஷ்கின் பேச்சு
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், "ஒரு இயக்குனருக்கு யாரையும் விமர்சிக்கவும் நகைச்சுவை கதாபாத்திரமாக காண்பிக்கவும் முழுக்க முழுக்க உரிமை இருக்கு. தமிழ் சினிமாவில் நிறைய பேர் தெரியாத்தனமாக கதை எழுதும்போது ஒருவருக்கு ஒரு பெயர் வைத்துவிடுகிறார்கள். அதற்கு இயக்குனர் மேல் கேஸ் போடுவார்கள். எந்த இயக்குனரும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்வதில்லை.
நான் இப்போது எழுதி முடித்துள்ள கதையில் ஒரு கேரக்டருக்கு பெயர் வைக்க 15 நிமிஷம் யோசித்தேன். அப்புறம் யுவராஜ் என்று வைத்தேன். முதலில் இளையராஜா என்று யோசித்தேன். ஆனால் அது கேஸ் ஆகிடும். எங்க அப்பா தான் அவரு. இருந்தாலும் அவர் கேஸ் போட்டுவிடுவார். என்னை எப்படி வேண்டுமானாலும் காட்டுங்கள், மோசமானவனாகவும் காட்டுங்கள். உண்மையில் நான் மோசமானவன் தான். அதற்கு முழு சுதந்திரம் இருக்கு. ஒரு இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.