அன்று நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடம்தான் இப்ப என்னோட அலுவலகம் - சூரி


அன்று நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடம்தான் இப்ப என்னோட அலுவலகம் - சூரி
x

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.

'விடுதலை' திரைப்படம் கடந்த 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், அன்று நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடத்தில்தான் இப்போது என்னுடைய அலுவலகம் இருக்கிறது என்று நடிகர் சூரி கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் ஆர்யா நடித்த 'கலாபக் காதலன்' படத்தின் ஆடிசனுக்கு சென்று இருந்தேன். நிறைய கூட்டம் இருந்தது. சாப்பிடாமல் சென்றதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.

அப்போது என்னை எதிரில் உட்கார வைத்து, எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தார்கள் நான் மதுரையில் இருந்து வருகிறேன். வாய்ப்பு தேடி வந்திருக்கிறேன். என்பதெல்லாம் நான் சொன்ன பிறகு என்னை அனுப்பி வைத்தார்கள். பின்னர் சுசீந்திரன் அண்ணன் அவர்களின் வெண்ணிலா கபடிக்குழு என்ற ஒரு படத்தில் நடித்து, நடிகரான இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கென தனியாக ஒரு ஆபீஸ் தேவைப்பட்டது.

அப்போது அந்த ஆபீஸ் வாங்க போகும்போது நான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தேன் என்னுடைய மேலாளரை அனுப்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் என்னுடைய மனைவி அந்த இடம் சரிப்பட்டு வராது என்பது போல கூறினார். அப்போது இரவு நான் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது என்னுடைய மேலாளரோடு அந்த இடத்தை பார்க்க சென்றேன். அந்த இடத்திற்குள் செல்ல செல்ல எனக்கு ஏதோ ஒரு மலரும் நினைவுகள் வந்து கொண்டே இருந்தன.

கடைசியில் அந்த கட்டிடத்திற்கு முன்பு நின்று இதுதான் அந்த ஆபீஸ் என்று சொன்னபோது, கலாபக் காதலன் படம் நினைவுக்கு வந்தது. என்ன விலை சொல்கிறார்கள் என கேட்டுவிட்டு உடனே வாங்குங்கள் என சொன்னேன். எல்லாம் முடிந்த பிறகு என் மனைவியிடம் இந்த உண்மையை சொன்னேன் அவள் கண்கலங்கி விட்டாள் என்று கூறினார்.


Next Story