ஆறு தசாப்தங்களின் ஒப்பற்ற பேரரசர்- கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். 1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்றார்.
தொடர்ந்து, பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி, போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு அபூர்வ சகோதரர்கள், நாயகன், தேவர் மகன், இந்தியன், விக்ரம் என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தலைமுறை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "ஏற்ற இறக்கங்கள், சவால்கள் அனைத்தையும் அவர் சந்தித்தார். ஆனால் எதுவும் உலக நாயகனையும் திரைத்துறையை உயர்த்த அவர் எடுக்கும் முயற்சியையும் நிறுத்தவில்லை. ஆறு தசாப்தங்களின் ஒப்பற்ற பேரரசர், தற்போது சினிமாவில் தன்னுடைய 64 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.