விரைவில் உருவாகும் சூர்யவம்சம் - 2.. சரத்குமார் நெகிழ்ச்சி


விரைவில் உருவாகும் சூர்யவம்சம் - 2.. சரத்குமார் நெகிழ்ச்சி
x

சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’. இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும், அவர் பயன்படுத்திய மரிக்கொழுந்து வாசனை திரவியம் அந்த காலத்தில் அவ்வளவு பேமஸாக இருந்தது. இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்ற இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா தாக்கம் இன்றுவரை உள்ளது.

இந்நிலையில், 'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!

விரைவில் சூர்யவம்சம் - 2!..." என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'சூர்யவம்சம்' இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story