எஸ்.ஜே.சூர்யா பட இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
இயக்குனர் ராதா மோகன் தற்போது வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இந்த வெப்தொடரின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை' திரைப்படத்தை இயக்கிய ராதா மோகன் தற்போது "சட்னி சாம்பார்" என்ற வெப் தொடரை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் வாணிபோஜன், 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர். சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"சட்னி சாம்பார்" வெப்தொடருக்கு பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த வெப் தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார்.
"சட்னி சாம்பார்" வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சில் இயக்குனர் ராதாமோகன் பேசியதாவது, "சட்னி - சாம்பார்" வெப்தொடரின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள் என்றார்.
மேலும், நடிகர் யோகிபாபு பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்" இருக்கும் என்றார்.