விமர்சனம்
பைரவா

பைரவா
விஜய் கீர்த்தி சுரேஷ் பரதன் சந்தோஷ் நாராயணன் எம். சுகுமார்
கதாநாயகன்-கதாநாயகி: விஜய்-கீர்த்தி சுரேஷ். டைரக்‌ஷன்: பரதன். தயாரிப்பு: விஜயா புரொடக்‌ஷன். கதையின் கரு: ஏழை மா
Chennai
கதாநாயகன்-கதாநாயகி: விஜய்-கீர்த்தி சுரேஷ்.

டைரக்‌ஷன்: பரதன்.

தயாரிப்பு: விஜயா புரொடக்‌ஷன்.

கதையின் கரு: ஏழை மாணவியின் கொலையும், கொலையாளியை பழிவாங்கும் இளைஞரும்...

விஜய், ஒரு வங்கியில் கடன் வசூல் செய்யும் வேலை செய்கிறார். ஒரு திருமண வீட்டில், அழகான கீர்த்தி சுரேசை சந்தித்து காதல்வசப்படுகிறார்.

அப்போது கீர்த்தி சுரேசை சுற்றி ஆபத்து வளையம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது என்ன? என்று விசாரிக்கும்போது, கீர்த்தி சுரேஷ் தனது முன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த முன் கதை...

திருநெல்வேலியில் கசாப்பு கடைக்காரராக இருந்து கல்வி தந்தையாக மாறிய வில்லன் ஜெகபதிபாபு, அவருடைய மருத்துவ கல்லூரி, மாணவர்-மாணவிகளுக்கு சரியான கல்வி வசதிகள் செய்து தராத கல்லூரி நிர்வாகம், அதை எதிர்த்து போராடும் மாணவர்கள்...என எதிர்பாராத இன்னொரு களத்தில் பயணிக்கிறது.

கல்லூரியை சோதனையிட வரும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகளை சரிக்கட்ட-அவர்களின் சபலத்துக்கு கேரளாவில் இருந்து வந்த அப்பாவி ஏழை மாணவியை (கீர்த்தி சுரேசின் தோழியை) பலி கொடுக்கிறார், ஜெகபதிபாபு. அதோடு பலியான மாணவியின் நடத்தை சரியில்லை என்று பழியும் போடுகிறார். தோழியின் கொலையில் நீதி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார், கீர்த்தி சுரேஷ். அவரையும் கொல்வதற்கு நேரம் பார்த்து காத்திருக்கிறார், ஜெகபதிபாபு.

இவ்வாறாக கீர்த்தி சுரேஷ் தன் முன் கதையை சொன்னதும், ஜெகபதிபாபுவை எதிர்த்து போராட விஜய் திருநெல்வேலிக்கு செல்கிறார். அவருக்கும், ஜெகபதிபாபுவுக்கும் இடையே நடைபெறும் விறுவிறுப்பான ஹீரோ-வில்லன் போராட்டமே ‘பைரவா.’

விஜய்க்கு ஆக்ரோஷம், காதல், கலகலப்பு கலந்த சகலகலா வேடம். சண்டை காட்சிகளில், ஜல்லிக்கட்டு காளையாக சீறியிருக்கிறார். “இங்க யார் கிட்டேயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் எங்கிட்ட இருக்கு. சொன்னா சொன்ன வார்த்தையை காப்பாத்தறது” என்ற பஞ்ச் வசனத்துடன் மைம்கோபியையும், அவருடைய அடிப்பொடிகளையும் அவர் கிரிக்கெட் ஆடி பிரித்து மேயும் ஆரம்ப சண்டை காட்சி, அட்டகாசம்.

கீர்த்தி சுரேசை அசைய விடாமல், டீக்கடையில் காவலில் வைத்திருக்கும் ரவுடிகள் விஜய்யை பார்த்ததும், ஏற்கனவே வாங்கிய அடி-உதைகளை நினைத்துப் பார்த்து கீர்த்தி சுரேசை விஜய்யுடன் மரியாதையாக அனுப்பி வைப்பது; போக்குவரத்து போலீஸ் காரர் மொட்டை ராஜேந்திரனை விஜய் சிக்கலில் மாட்டி விடுவது-சுவாரஸ்யம் மிகுந்த கலகல காட்சிகள்.
விஜய்க்கும், ஜெகபதிபாபுவுக்குமான கதாநாயகன் - வில்லன் மோதல்களில் எதிர்பார்ப்பும், திருப்பங்களும் நிறைந்திருப்பதால், திரைக்கதை சூப்பர் வேகத்தில் பறக்கிறது. குறிப்பாக அந்த கோர்ட்டு காட்சியில், ஏழை மாணவியின் பரிதாப முடிவு பற்றி விஜய் உருக்கமாக பேசி, நெகிழவும் வைக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் அழகாக சிரிக்கிறார். முறைக்கிறார். கலங்குகிறார். பாடல் காட்சிகளில் நளினமாக ஆடுகிறார். வில்லன்கள் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, மைம்கோபி மூன்று பேருமே போட்டி போட்டு மிரட்டி யிருக்கிறார்கள். வங்கி அதி காரியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், கெட்ட போலீசாக அறிமுகமாகி நல்ல போலீசாக மாறும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் திருப்பமான கதாபாத்திரங்கள். கீர்த்தி சுரேசின் மாமா தம்பிராமய்யா, ஜெக பதிபாபுவின் கைத்தடி ஸ்ரீமன், விஜய்யின் நண்பர் சதீஷ் ஆகிய மூவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளன. கவிஞர் வைரமுத்துவின் “பட்டையக் கெளப்பு” பாடலும், “பாப்பா பாப்பா பப்பரப் பப்பா” பாடலும் விஜய் ரசிகர்களுக்கு திகட்டாத சர்க்கரை பொங்கல். “மஞ்சள் மேகம்” பாடலில் மோகமூட்டும் காதல் வரிகள்.

காதல், மோதல் இரண்டையும் சரிசம விகிதத்தில் கலந்து ஜனரஞ்சகமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பரதன். படத்தின் நீளம், ரொம்ப அதிகம். இடைவேளைக்குப்பின், படத்தின் நீளத்தை குறைத்திருந்தால், சிறப்பு-மிக சிறப்பு.

முன்னோட்டம்

நதி

அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 01, 07:54 PM

யானை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 01, 05:06 PM

ருத்ர தாண்டவம்

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 30, 08:05 PM
மேலும் முன்னோட்டம்