கட்டப்பாவ காணோம்


கட்டப்பாவ காணோம்
x
தினத்தந்தி 21 March 2017 11:26 PM GMT (Updated: 21 March 2017 11:25 PM GMT)

சிறு வயதில் இருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சிபிராஜை ஒதுக்குகின்றனர்.

கதையின் கரு: காணாமல் போன வாஸ்து மீனுக்காக நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

தனது தொழில் நஷ்டத்துக்கு சிபிதான் காரணம் என்று அவரது தந்தையும் வெறுக்கிறார். விரக்தியில் இருக்கும் சிபிராஜுக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கும் காதல் மலர்கிறது. இருவருக்கும் ராசி பொருத்தம் இல்லை என்று எதிர்ப்பு வருகிறது. அதை மீறி திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.

அப்போது உள்ளூர் தாதா மைம்கோபி தனக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக கருதி வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன் திருட்டு போகிறது. அந்த மீன் பல கைகள் மாறி சிபிராஜிடம் வருகிறது. வாஸ்து மீனிடம் கோடீஸ்வரர்கள் ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் பிரார்த்திக்கிறார். அப்போது ரவுடி கும்பல் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து மறைத்து வைத்திருக்கும் நான்கு கோடி பணத்தை கொடுத்து விடு என்று அடித்து சித்ரவதை செய்கிறார்கள்.
மைம் கோபி ஆட்கள் வாஸ்து மீனை தேடி அலைகிறார்கள். அந்த மீனை திருப்பித்தர சிபிராஜ் நான்கு கோடி கேட்கிறார். அந்த பணம் கிடைத்ததா? ரவுடிகளிடம் இருந்து தப்பினார்களா? என்பது மீதி கதை.

சிபிராஜ் நகைச்சுவை நாயகனாக மாறி, கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதிர்ஷ்டமில்லாதவன் என்று ஒதுக்கப்படும் வேதனை, ஏமாற்றங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். வீட்டுக்குள் புகுந்த ரவுடிகளுக்கும் அவருக்கும் நடக்கும் மோதல்கள் சுவாரஸ்யம்.

வாஸ்து மீனை வைத்து தாதாவிடம் பேரம் நடத்துவது விறுவிறுப்பு. வாஸ்து மீன் கேட்டதை கொடுக்கும் என்று நம்பும் பக்கத்து வீட்டு சிறுமியின் ஆசைகளை நிறைவேற்றி கதாபாத்திரத்தை மெருகூட்டுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அழகும் கவர்ச்சியுமாய் வருகிறார். சிபிக்கும் இவருக்குமான மோதலும் காதலும் ரசிக்க வைக்கிறது. காளிவெங்கட், யோகி பாபு நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளனர். மைம்கோபி, சித்ரா லட்சுமணன், திருமுருகன், சரவணன், சாந்தினி கதாபாத்திரங்களும் நகைச்சுவை கதைக்கு உதவுகின்றன.

சிரிக்க வைக்கும் நோக்கில் திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர் மணிசெய்யோன். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி ஒன்ற வைக்கிறது. சந்தோஷ் குமார் தயாநிதி இசையும் ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவும் பலம் சேர்க்கின்றன.

Next Story