விமர்சனம்
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
அதர்வா, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ரெஜினா கசன்ட்ரா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதீதி போஹங்கர் ஓடம் இளவரசு டி.இமான் ஸ்ரீசரவணன்
கதையின் கரு: காதல் மன்னனாக இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள்.
Chennai
அதர்வா, ஒரு காதல் மன்னன். ஒரே சமயத்தில் ரெஜினா கசன்ட்ராவையும், அதிதியையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், அதர்வாவின் காதல் விவகாரம் வெளிப்பட-ஊரை விட்டே விரட்டியடிக்கப்படுகிறார். வேறு ஒரு ஊரில் குடியேறும் அவருக்கு அங்குள்ள பிரணிதா மீது காதல் வருகிறது.

இந்த காதலுக்கு பிரணிதாவின் அப்பா மயில்சாமி எதிர்ப்பு தெரிவிக்க-அதர்வாவும், பிரணிதாவும் தங்கள் காதலில் உறுதியாக இருக்கிறார்கள். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். கடைசி நிமிடத்தில், அதர்வா காதல் மன்னன் என்பது வெளிப்பட-பிரணிதா விழித்துக் கொள்கிறார். அதர்வாவை திட்டி விட்டு, அப்பா மயில்சாமியுடன் போகிறார்.

இந்த சூழ்நிலையில், அதர்வாவுக்கு ஆதரவற்றோர் பள்ளி ஆசிரியை ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகம் ஆகிறார். அவருடனும் அதர்வாவுக்கு காதல் மலர-இந்த காதலாவது ஜெயித்ததா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’
ஜெமினி கணேசன் என்ற காதல் மன்னன் கதாபாத்திரத்துக்கு அதர்வா கச்சிதமாக பொருந்துகிறார். நிறைய காட்சிகளில் அவருடைய கண்களே பேசியிருக்கின்றன. ரெஜினாவையும், அதிதியையும் அவர் ஒரே சமயத்தில் காதலிப்பதும், அதைப்பார்த்து அப்பா டி.சிவா பொருமுவதும், கலகலப்பான ஆரம்பம். மூன்றாவதாக அதர்வாவின் காதல் வலையில் பிரணிதா சிக்குவது, எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

அப்பா மயில்சாமியின் எதிர்ப்பை மீறி பிரணிதா, அதர்வாவை காதலிப்பதும், “ஒரே ஒரு நிமிடம் என் மகளுடன் பேச வேண்டும்” என்று அதர்வாவிடம், மயில்சாமி கேட்பதும், அந்த ஒரு நிமிடத்தில் அதர்வா-பிரணிதா காதல் முறிந்து போவதும், அடுத்தது என்ன? என்ற ஆர்வத்தை தூண்டும் காட்சிகள். அதர்வாவின் பழைய காதலிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘ஜெமினி’ என்றும், ‘கணேசன்’ என்றும் பெயர் சூட்டியிருப்பது, சூப்பர் காமெடி.

அதர்வாவின் கூடவே வரும் சூரியும், அவர் தொடர்பான நகைச்சுவை காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. கடைசியில் தன் வீட்டு ரகசியம் வெளிப்படுகிற இடத்தில் சூரியின் முகபாவனைகள், அட்டகாசம். கதாநாயகிகள் நான்கு பேருக்கும் சம பங்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், மனதில் நிற்பவர்கள் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா ஆகிய மூன்று பேர் மட்டுமே. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி ஆகிய இருவரும் வருகிற காட்சிகள், படத்தை மேலும் கலகலப்பாக்குகின்றன.

டி.இமான் இசையில், “ஆஹா...ஆஹா...” பாடல், சுகமான ராகம். பின்னணி இசை, கதையோட்டத்துக்கு பொருத்தமாக இருக்கிறது. பாடல் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் எம்.ஸ்ரீசரவணன்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இயக்கியிருக்கிறார், டைரக்டர் ஓடம் இளவரசு. முதல் பாதி, பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தாமல், மெதுவாக கடந்து போகிறது. இரண்டாம் பாதியில், கதை வேகம் பிடிக்கிறது. கடைசி 20 நிமிடங்கள், நகைச்சுவை திருவிழா.

முன்னோட்டம்

கன்னிராசி

முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கன்னிராசி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 13, 09:37 AM

மகாமுனி

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் மகாமுனி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 07, 10:37 PM

சிவப்பு மஞ்சள் பச்சை

சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 07, 10:19 PM
மேலும் முன்னோட்டம்