விமர்சனம்
துப்பறிவாளன்

துப்பறிவாளன்
விஷால், பிரசன்னா, வினைய், கே.பாக்யராஜ், தலைவாசல் விஜய் அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா மிஷ்கின் அருள் கொரோல்லி கார்த்திக் வெங்கட்ராமன்
கதையின் கரு: மர்ம கொலைகளில் துப்பறிந்து கொலைகாரனையும், கொலைக்கான காரணங்களையும் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறிவாளனின் கதை.
Chennai
வின்சென்ட் அசோகன், ஒரு தொழில் அதிபர். பல கோடி ரூபாய் மதிப்பில் ஒரு காண்ட்ராக்ட்டை எடுக்கப் போகும் வேளையில், அவருடைய பிறந்த நாள் வருகிறது. அழகான மனைவி சிம்ரன், அன்பான 2 குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் தன் பிறந்த நாளை எளிமையாக அவர் கொண்டாட தயாராகும்போது, மின்னல் தாக்கி அவரும், அவருடைய மகனும் இறந்து போகிறார்கள்.

ஒரு வணிக வளாகத்தில் எறும்பு கடித்தது போல் உணரும் போலீஸ் அதிகாரி ‘ஆடுகளம்’ நரேன், உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் அமர்ந்திருக்கும்போது, திடீர் மரணம் அடைகிறார்.

பணத்துக்கு ஆசைப்படாத தனியார் துப்பறிவாளர் விஷால், ஒரு சிறுவனின் நாய் கொலை செய்யப்பட்டதை துப்பறிந்து கண்டுபிடிக்க சம்மதிக்கிறார். போலீசால் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், திறமையாக துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து விடும் அவர், சிறுவனின் நாய் கொலை செய்யப்பட்டது எப்படி? என்று விசாரிக்கும்போது, வின்சென்ட் அசோகன், நரேன் ஆகிய இருவரும் அறிவியலை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. இறுதியாக, தங்கள் கும்பலை விஷால் நெருங்கி விட்டதை உணர்ந்த கொலைகாரன் வினய், அவருடைய உயிருக்கு குறி வைக்கிறார். அந்த கொலைகார கும்பலிடம் இருந்து விஷால் தப்பினாரா, கொலைகள் அனைத்தும் எதற்காக நடந்தன, எப்படி நடந்தன? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

‘கனியன் பூங்குன்றன்’ என்ற தனியார் துப்பறிவாளராக வருகிறார், விஷால். கழுத்தை சுற்றி கைக்குட்டையை கட்டிக் கொண்டு, கறுப்பு கண்ணாடி-தொப்பி சகிதம், இதுவரை பார்த்திராத விஷால். வீட்டில் புத்தகங்களுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு அவர், நண்பர் பிரசன்னாவுக்கு திடீர் வேலைகள் கொடுப்பதும், தன்னைத் தேடி வருபவர்களின் ஜாதகத்தை அவர்களே வியந்து போகும்படி சொல்வதும், மூளையில் பொறி தட்டியதும் அவசரமாக வெளியே ஓடுவதுமாக மாறுபட்ட விஷால், ரசிக்க வைக்கிறார்.
ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் அனு இமானுவேலை வீட்டுக்குள் கொண்டு வந்து, வீட்டு வேலைகளை செய்ய வைத்து, அவரை அதட்டி உருட்டும் விஷால், அனு இமானுவேல் கொலை செய்யப்பட்டதும் கதறி துடிப்பது, நெகிழ வைக்கிறது. சண்டை காட்சிகளில் விஷாலின் வேகமும், தொழில்நுட்பமும் மிரள வைக்கிறது. குறிப்பாக, அந்த ‘பார்’ சண்டை காட்சி, மிரட்டலான மோதல்.

கதாநாயகி அனு இமானுவேலையும், விஷால் கூடவே இருக்கும் நண்பர் பிரசன்னாவையும் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். கொலைகார கும்பலில் மூளையாக செயல்படும் பாக்யராஜ், வில்லனாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவருடைய ஒப்பனைக்கும், அதிகம் பேசாத நடிப்புக்கும், ஒரு சபாஷ். முக்கிய வில்லன் வினய் நின்று நிதானமாக செய்யும் வில்லத்தனமும், கொலைகளும் உறைய வைக்கின்றன. வில்லியாக வரும் ஆண்ட்ரியா, அடேங்கப்பா! வில்லிக்கு வில்லி. கவர்ச்சிக்கு கவர்ச்சி.
அரோல் கரோலியின் பின்னணி இசையும், கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவும் திகில் காட்சிகளுக்கு மேலும் திகிலூட்டுகின்றன. ஹாலிவுட் பாணியில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் மிஷ்கின். ஆரம்ப காட்சிகளில் நீளம் கருதி குறைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிகிறது. இதனால், சில காட்சிகளை யூகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மர்ம சாவுகள் எப்படி நிகழ்கின்றன? என்பதும், அதற்கான அறிவியல் பின்னணியும், மிஷ்கின் முத்திரைகள். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம்..வேகம்..வேகம்... அனு இமானுவேலின் பிக்பாக்கெட் கதாபாத்திரத்தை ‘கிளைமாக்ஸ்’சில் ஒரு முக்கிய தடயமாக்கி இருப்பதில், டைரக்டரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

முன்னோட்டம்

பேட்ட

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம்.

துப்பாக்கி முனை

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.

ஜானி

வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம்.

மேலும் முன்னோட்டம்