ஹரஹர மஹாதேவகி


ஹரஹர மஹாதேவகி
x
தினத்தந்தி 2 Oct 2017 9:35 PM GMT (Updated: 2 Oct 2017 9:35 PM GMT)

என்ஜினீயரிங் படித்து விட்டு, பிணங்களுக்கு குளிர்சாதன சவப்பெட்டிகள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் கவுதம் கார்த்திக்கும்

கல்லூரியில் படிக்கும் நிக்கி கல்ராணியும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. சில நாட்களிலேயே தகராறும் ஏற்படுகிறது.

இருவரும் நேரில் சந்தித்து காதலை முறித்துக் கொண்டு பிரிவதற்காக ரிசார்ட்டில் சந்திக்க முடிவு செய்கின்றனர். காதல் பரிசாக வாங்கிய பொருட்களை ஆளும் கட்சி தலைவர் வாக்காளர்களுக்கு விநியோகித்த பையில் அள்ளிப்போட்டு திருப்பி கொடுக்க கொண்டு செல்கிறார் கவுதம் கார்த்திக்.

அனுதாபத்தை பெற்று ஆட்சிக்கு வரும் திட்டத்தில் அதே போன்ற இன்னொரு பையில் எதிர்க்கட்சி தலைவர் ரவி மரியா வெடி குண்டை பதுக்கி பொதுக் கூட்ட மேடைக்கு அடியில் வைத்து விட்டு வரும்படி ரவுடிகளை அனுப்புகிறார்.

இதே மாதிரியான மற்றொரு பையில் கள்ள நோட்டுகளை வைத்து அவற்றை நல்ல நோட்டுகளாக மாற்ற கொண்டு செல்கிறார் பால சரவணன். இந்த பைகள் திடீரென மாறி விடுகின்றன. குண்டு இருக்கும் பை கவுதம் கார்த்திக் கைக்கு வந்து விடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகளும் வெடிகுண்டு என்ன ஆனது என்பதும் கிளைமாக்ஸ்..

கவுதம் கார்த்திக் கதாபாத்திரத்தில் யதார்த்தமாய் வருகிறார். வீட்டில் ஏ.சி இல்லை என்று குளிர் சாதன பிணப்பெட்டிக்குள் தூங்கி எழுந்து வரும் ஆரம்பமே ஆரவாரம். உடம்பில் ஆடையில்லாத நிலையில் தன்னை நிக்கி கல்ராணி பார்த்ததும் கடவுளே கடவுளே என்று கவுதம் கார்த்திக் புலம்புவதும் அதே போன்ற சந்திப்புகள் அவர்களுக்குள் தொடர்ந்து நிகழ்வதும் சுவாரஸ்யங்கள்.

சாவு ஊர்வலத்தில் ஆடும் தனது ஆட்களை அழைத்து வந்து நிக்கி கல்ராணி முன்னால் ஆடவிட்டு காதலை சொல்லும் காட்சி ரகளை. நிக்கி கல்ராணி டயர் சுமப்பது, சாவு ஒப்பாரி குழுவினருடன் ஆடும் காதலனை பார்த்து எரிச்சலாவது ஆகிய காட்சிகளில் கவர்கிறார்.

வெடிகுண்டு சதிகார கோஷ்டிகளான ரவி மரியா, நமோ நாராயணன், கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் கூட்டணியின் நகைச்சுவை தியேட்டரை குலுங்க வைக்கிறது. கள்ள நோட்டு மாற்றும் பாலசரவணன், சாமியாராக வரும் மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் சிரிக்க வைக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ் போலீஸ் அதிகாரியாக மனதில் நிற்கிறார். ரிசார்ட்டில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ரசிக்க வைக்கிறது.

படம் முழுக்க வரும் ஆபாச வசனங்கள் நெளிய வைக்கிறது. சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் காட்சிகளை கலகலப்பாக நகர்த்தி இருக்கிறார் டைரக்டர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். பாலமுரளி இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. செல்வகுமார் ஒளிப்பதிவும் சிறப்பு.


Next Story